தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையான தஹி என அச்சிட வேண்டும் என்றும் மேலும் அடைப்பு குறிக்குள் தமிழ் மற்றும் கன்னட வார்த்தைகளான தயிர் மற்றும் மோசரு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது
இந்நிலையில் இந்த அறிவிப்பை திரும்ப பெறுமாறு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் FSSAI தலைவர் ராஜேஷ் பூஷனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநில அரசு நிர்வகிக்கும் கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் மாநில மொழி வார்த்தைகளுக்குப் பதிலாக “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI அறிவுறுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதுமே மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதிய தேசிய கல்விக்கொள்கை, பள்ளிகளில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியது.
நமது பிரதமர் மோடி உலக அரங்கில் பல மேடைகளில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பேசியுள்ளார்.
எனவே, கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.