பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியை தலைவர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய அவர், பூத் அளவில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார்
பாஜகவின் 44வது நிறுவன தினம் நாடு முழுவதும் கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
கமலாலயம் அமைந்துள்ள பகுதியின் கிளை கமிட்டி தலைவர் நித்ய பிரியா, கொடி கயிற்றை வழங்க, அண்ணாமலை கட்சி கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து காங்கிரசில் 45 ஆண்டுகளாக செயல்பட்ட தலைமை நிலைய பேச்சாளர் அத்திபட்டு துரைகருணன் தலைமையில் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து தலைவர் அண்ணாமலை வரவேற்றார். இதனை தொடர்ந்து அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.
பின்னர் தமிழ் காலண்டர் வெளியிடப்பட்டது.வேலுநாச்சியார், ஜான்சிராணி, நாயன்மார்கள், ராமானுஜர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களை கொண்ட காலண்டரை தலைவர் அண்ணாமலை வெளியிட்டதுடன் ஆட்டோவில் மீண்டும் மோடி ஆட்சி என்ற வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டினார்.
பின்னர் நிறுவன தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் காணொலி மூலம் உரையாற்றினர். இதனை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அமர்ந்து தலைவர் அண்ணாமலை கேட்டார்.
பின்னர் கமலாலயம் அமைந்துள்ள பகுதியில் தாமரை சுவரோவியத்தை வரைந்தார். தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், நீர் மோர் பந்தலையும் தொடக்கி வைத்தார்.
பாஜக நிறுவன தினத்தில் துவங்கி, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்.14ம் தேதி வரை சமூகநீதி வாரமாக கொண்டாட பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 7 நாட்களில், கட்சியில் புதிய நபர்களை சேர்ப்பது, கிளை தலைவர்களை கெளரவிப்பது, ஒரு பூத்தில் குறைந்தது 5 இடங்களில் தாமரை சின்னத்தின் சுவரோவியங்களை வரைவது, ஒவ்வொரு பாஜக தொண்டனும் தனது வீட்டில் கட்சி கொடியை பறக்கவிடுவது உள்ளிட்ட பணிகளை பாஜக தொண்டர்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த பிரசாரத்தை தலைவர் அண்ணாமலை இன்று ஆரம்பித்து வைத்தார்
மேலும் ஏப்.11ம் தேதி சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலேவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு கூட்டங்களை நடத்தி மறைக்கப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகள், இரட்டை மலை சீனிவாசன், கக்கன், உவே சுவாமிநாத ஐயர், சுவாமி சகஜானந்தா ஆகியோரின் வரலாற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் அம்பேத்கரின் பிறந்தநாளான்று மாவட்ட அளவில் அவரது வரலாறு, தேசப்பணிகள் குறித்த கருத்தரங்கை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.