தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, #திராவிடமாடல் என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து தனது அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறார். தனது அன்றாட அலுவல் பணிகள் மற்றும் ஏதேனும் புதிய திட்டத்தை அறிவித்தால் கூட அது #திராவிடமாடல் அரசின் சாதனை என விளம்பரப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்த திராவிட மாடல் முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு முதலீடு வரவழைப்பதாக கூறி துபாய் சென்று பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டது, ஒரு தில்லுமுல்லு நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளது. துபாய் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காகவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காகவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய் சென்றார். தனி விமானத்தில் துபாய் சென்ற அவருக்கு ராஜமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஸ்டாலினுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் சென்றிருந்தனர். அப்போதே இந்த பயணம் அரசுமுறை பயணமா ? அல்லது குடும்பச் சுற்றுலாவா ? என விமர்சிக்கப்பட்டது
அங்கு 6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடிக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் அதன்மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் ரூ.6,100 கோடி முதலீட்டில் ரூ.3500 கோடியை லூலூ என்ற தனியார் நிறுவனம் முதலீடு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது தெரியவந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். லூலூ நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி dmkfiles ஐ வெளியிட்ட தலைவர் அண்ணாமலை, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மற்றொரு நிறுவனமும், ரூ.1000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்ட நிறுவனமுமான நோபிஸ் ஸ்டீல்ஸ், ஸ்டாலின் குடும்பத்துடன் நேரடி தொடர்பில் இருந்ததை அம்பலப்படுத்தினார். இந்நிறுவனத்தின் இயக்குநராக கடந்த 2009ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இருந்ததையும், அன்பில் மகேஷ் இதன் கிளை நிறுவனமான நோபிஸ் பிரிக்சின் இயக்குநராக, 2014ல் பதவி வகித்ததையும் சுட்டிகாட்டினார்.
மேலும் பேசிய அவர், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வரக் கூடாது என்பதற்காக நோபில் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறு திமுக குடும்பத்துக்கு நெருங்கிய தொடர்பில் உள்ள நோபிள் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன், துபாயில் வைத்து ரூ.1000 கோடியை முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் செயல் என குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, துபாயில் மு.க ஸ்டாலின், நோபிள் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்திருந்தார். இதற்கும் பதிலளித்துள்ள தலைவர் அண்ணாமலை, நோபில் ஸ்டீல்ஸ் கிளை நிறுவனமான நோபில் பிரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம் அப்துல்லாவும் உறுப்பினராக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் திமுகவினருடன் தொடர்பில் உள்ள நிறுவனமான நோபில் ஸ்டீல்ஸ் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ள நிதி யாருடையது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.