கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. மேலும் மதம் மாறிய பிறகும் சாதி கொடுமை தொடர்வதை இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம், ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் திமுகவின் இந்த தீர்மானத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அரசியலமைப்பு சட்டப்படி. எஸ்.சி இட ஒதுக்கீடு, இந்து, சீக்கிய, புத்த மதங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் அறிக்கை எதையும் முதலமைச்சர் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே ஒரு குழு அமைத்து ஆராய்ந்து வருவதால் தீர்மானம் தேவையற்றது எனவும் கூறியுள்ளார்
2022 அக்டோபர் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி, பாலகிருஷ்ணன் தலைமையில், கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறிய பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும், இந்துக்களுக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டி காட்டினார்.
dmkfiles குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் முறையாக ஆதாரங்கள் வழங்காமல் திமுக இழுத்தடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உதயநிதி மற்றும் சபரீசன் ஆகிய இருவர் மட்டும் இணைந்து இந்த ஆண்டு ரூ.30,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஆடியோ வெளியாகியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரங்களை மறைக்கவே இதுபோன்ற திசை திருப்பும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.