dmkfiles என்ற பெயரில் தலைவர் அண்ணாமலை திமுகவினரின் 12 பேரின் சொத்து மதிப்புகளை வெளியிட்டார். ஸ்டாலின் உள்பட திமுகவினர் 12 பேரிடம் மட்டும் ரூ.1.3 லட்சம் கோடிக்கு சொத்து உள்ளதாக #dmkfilesயில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட அந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உரிய விளக்கத்தை அளிக்காத திமுக, இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி 500 கோடி ரூபாய் கேட்டும், உதயநிதி ஸ்டாலின் 50 கோடி ரூபாய் கேட்டும் மனு அனுப்பியுள்ளனர். அதேபோல டிஆர் பாலுவும், 500 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் இவர்களின் இந்த நோட்டீசுக்கு டிவிட்டர் மூலம் பதிலளித்துள்ள தலைவர், பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் திமுகவின் முதல் குடும்பம் மட்டும் ரூ.30,000 கோடியை சேர்த்துள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஓப்புதல் வாக்குமூலம் அளித்தும் எந்த பதிலும் அளிக்காத #திராவிடமாடல் தனக்கும் நோட்டீஸ் அனுப்புவதற்கு மட்டும் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதாக கூறியுள்ளார்.
திராவிடமாடல் அரசு பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்ட குற்றச்சாட்டை அம்பலப்படுத்தியதற்காக, அந்நிறுவனம் ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல ஆர்.எஸ் பாரதி ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறு இதுவரை ரூ.1250 கோடி இழப்பீடு கேட்டு திமுகவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது கஜானாவை நிரப்ப வேண்டுமென்ற திமுகவின் இந்த ஆசைக்கு முடிவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற வெற்று மிரட்டல்கள், அவதூறு நோட்டீஸ்கள் எல்லாம் உங்களது விருப்பத்தை ஒரு போதும் நிறைவேற்றாது. எனது வாயை மூடுவதற்கு இதைவிட சிறந்த வேறு ஏதாவது யுக்தியை பயன்படுத்துமாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.