தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வாடியூரில் நடைபெற்ற மே தினம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது பொதுமக்கள் அவரிடம் ஊராட்சி பகுதியில் இயங்கு வரும் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாகவும், நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களின் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதலில் டாஸ்மாக் கடைகளை அகற்ற பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கும் ஆட்சியர் மேம்போக்காக பதிலளித்துள்ளார்.
அடுத்ததாக பேருந்து போக்குவரத்து தொடர்பான பிரச்சனைக்கு பதிலளித்த அவர், மகளிருக்கு இலவச பேருந்து அளித்ததன் காரணமாக போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற பேருந்துகளை அரசு நிறுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த பதில் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதாவது பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்ட, பிங்க் நிறப் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகிறது. மேலும் அவர்களை இழிவாக பேசும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியரின் பதிலும் அமைந்துள்ளது.
பெண்களுக்கு இலவசமாக பேருந்துகளை இயக்குகிறோம் என பேசிவிட்டு நடைமுறையில் இப்படி மோசமாக நடந்து கொள்வது தான் #திராவிடமாடலா என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். காசை வாங்கி கொண்டாவது போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.