தனியார் நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த பதில் திமுகவினருக்கு மீண்டும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக ஆளுநர் உரையில் அரசின் கொள்கைகளை படிக்காமல் விட்டுவிட்டதாகவும், அம்பேத்கார் போன்ற தலைவர்களின் பெயர்களை சொல்லவில்லை எனவும் எழுந்த விமர்சனத்துக்கு அவர் அளித்த பதிலாவது:
அரசு தயாரிக்கும் உரையைப் பொறுத்தவரை, அது பொதுவாக அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களை கொண்டிருக்கும். அப்படித்தான் அது இருக்க வேண்டும், அதை ஆளுநர் படிக்க வேண்டும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரையில் அரசின் கொள்கைகளோ, திட்டங்களோ அல்ல, அது பிரசாரம் போல இருந்தது. அது தவறான தகவல்களையும் பொய்களையும் கொண்டிருந்தது.
சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரையில் தமிழ்நாடு ‘அமைதிப்பூங்கா’ என்று கூறியிருந்தார்கள். அவர்களிடம் சில நிகழ்வுகளை மேற்கோள்காட்டினேன்.
தமிழ்நாட்டில், பி.எஃப்.ஐ., பயங்கரவாத அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்ட மறுநாளில் இருந்து, ஐந்து நாட்களாக, பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தன. 50க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்போது கோயம்புத்தூரில் ஒரு கோயில் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது.
அடுத்து கள்ளக்குறிச்சி பள்ளி தாக்குதலை குறிப்பிட்டு கேட்டேன். ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தது. அது நடந்த நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு, 5,000 பேர் வெகு தொலைவில் இருந்து வந்து, பள்ளியில் கூடி, அதை எரித்தனர். மாணவர்களின் சான்றிதழ்கள், நூலகம் அனைத்தையும் எரித்தனர், மாடுகளின் மடிகளை வெட்டினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் உள்ளன. மேலும் இவை அனைத்தும் போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நடந்தன.
இன்னுமொரு சம்பவத்தில், சட்டசபையில் உரையாற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில், சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவரை திமுக பிரமுகர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டினார். அந்த புகாரை வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் அந்த காலவருக்கு ஏற்பட்டது.
அது மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் மாஃபியாக்கள் பற்றி கேள்விப்படுகிறோம். சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்த மணல் மாபியா கும்பல் அவரை வெட்டிக் கொன்றது. மேலும், தமிழ்நாடு மற்றும் பாகிஸ்தானில் சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலுக்கான கும்பல்கள் செயல்படுவதாக மத்திய அமைப்புகள் அரசுக்குத் தெரிவித்துள்ளன. இப்படியெல்லாம் நடக்கும்போது, இது ‘அமைதியின் புகலிடம்’ என்று சொல்லச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைச் சொல்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலையை வைத்தவன் நான். அம்பேத்கர் எனது இதயத்தில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.