தனியார் நாளிதழுக்கு வியாழன்று பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என் ரவி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டதாக தெரிவித்தார். குழந்தை திருமணம் நடைபெறுவதாக தீட்சிதர்கள் மீது, சமூக நலத்துறை அரசு அலுவலர்கள் 8 புகார்களை அளித்ததாக தெரிவித்த அவர், ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை எனக் கூறினார். சிறுமிகளின் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ‘இரண்டு விரல் பரிசோதனை’, கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வைத்தனர். அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆளுநர் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு கோவில்கள் தொடர்பாக தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாட்டில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவித்தார். இத்தகைய குழப்பங்கள் இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு கோயில்களை சிறப்பாக நிர்வகிப்பதாக நான் ஏன் பாராட்ட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.