முந்தைய கல்வி ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்த காரணத்தால் 2023-24 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி இளங்கலை பொறியியல் படிப்புகளை நிறுத்தப்படும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்தது.
இந்த 11 கல்லூரிகளிலும் தமிழ் வழி படிப்புகளில், 10க்கும் குறைவான மாணவர்களே இருந்ததாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்நிலையில் அண்ணா பல்கலை கழகத்தின் இந்த அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை, நாடு முழுவதும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்து, அதற்கான தொடர் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசோ, தாய்மொழி குறித்து சிறிதும் சிந்திக்காமல், தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. செய்யாத சாதனைகளுக்காக வீண் விளம்பரங்கள் செய்வதை நிறுத்தி விட்டு, தாய்மொழி கல்வியை ஊக்குவிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் வழி கல்வி ரத்து என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் வழியில் புதிய பாடப்பிரிவுகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.