புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு நிகழ்ச்சியில் தமிழ் மன்னர்களின் அடையாளமான செங்கோல் இடம்பெறும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் சார்பில் இந்த செங்கோல், பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் எனவும் பின்னர் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகில் வைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியத்தில் செங்கோலின் முக்கியத்துவம் குறித்து விளக்குவதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வந்தார். அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, செங்கோலை வைத்து, மவுண்ட் பேட்டனிடம் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சி பொறுப்பை பெற்றதாக தெரிவித்தார்.
தமிழர் பாரம்பரியத்தில் இருந்த இந்த வழக்கம், இங்கிலாந்தில் 1670ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது, மதுரையின் ஆட்சி பொறுப்பை ஏற்றதை குறிக்கும் வகையில் செங்கோல் வழங்கப்படும் வழக்கம் உள்ள்தையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழர் பாரம்பரிய நூலான திருக்குறளில், செங்கோன்மை என்ற அதிகாரமே உள்ளதாகவும் கூறிய அவர், பாரபட்சமற்ற அனைவருக்குமான ஆட்சி என்பது தான் செங்கோலின் அடையாளம் எனவும் கூறினார். பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க தருமபுரி, திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்