தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அண்மையில் தான் புல்லட் ரயிலில் பயணிப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் ஜப்பானின் ஒசாகோ நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவுக்கு புல்லட் ரயில் தான் சென்றதாக தெரிவித்திருந்தார். புல்லட் ரயிலில் ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடந்து விடுவதாக தெரிவித்த அவர், இந்தியாவுக்கு இதுபோன்ற ரயில்கள் வருவது எப்போது, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெற போவது எப்போது என கேள்வி எழுப்பினார்.
அவரது இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். தமிழ்நாட்டில் சென்னை – சேலம் எட்டு வழி சாலை திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பாரத் மாலா பரியோஜனா என்ற மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
சுமார் 274 கிலோமீட்டர் நீளம், 90 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலை, விவசாய நிலங்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், குடியிருப்புகள் வழியாக அமைக்கப்பட இருந்தது. இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் கையகப்படுத்தப்பட இருந்த நிலத்தின் அளவு 1900 ஹெக்டேர். அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த புள்ளிவிவரப்படி, அதில் 1100 ஹெக்டேர் வறண்ட நிலம், 400 ஹெக்டேர் விவசாய நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படியே இந்தியாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அகமதாபாத்-மும்பை இடையிலான புல்லட் ரயிலுக்காக கையகப்படுத்தப்பட்ட மொத்த நிலங்களின் அளவை பார்ப்போம். மகாராஷ்ட்ரா, தாதர் நகர் ஹாவேலி, குஜராத் என இரண்டு மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் வழியாக இந்த புல்லட் ரயில் செல்கிறது. இந்த திட்டத்துக்காக குஜராத்தில் 360 ஹெக்டேர், மகாராஷ்ட்ராவில் 433 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தாத்ரா நகர் ஹாவேலியில் 8 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலங்கள் இரண்டே வகை தான். ஒன்று விவசாய நிலங்கள், மற்றொன்று குடியிருப்பு பகுதிகள். புல்லட் ரயில் திட்டத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் பல விவசாய கிராமங்கள் தங்களது நிலங்களை வழங்க ஒப்புக்கொள்ளவில்லை. இதேபோல அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களையெல்லாம் சாமாதானப்படுத்தி, நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட அதிகவிலை கொடுத்து அந்த திட்டம் தற்போது வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. உதாரணமாக சூரத்தை சேர்ந்த ஹரி ஓம் என்பவரும் அவரது சகோதரரும் சுமார் மூன்றரை ஏக்கர் விவசாய நிலம் வைத்திருந்தனர். நிலத்தை கையகப்படுத்தும் போது இருவரும் இணைந்த வங்கி கணக்கில் 29 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக செலுத்தப்பட்டது. இது சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.
இதுபோன்று வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்யும் அரசுகள் ஒருபுறம்.
அப்படியே தமிழ்நாட்டுக்கு வருவோம். எட்டு வழி சாலை கொண்டுவரப்பட்ட போது அதனை கடுமையாக எதிர்த்த கட்சி திமுக. திமுகவின் தோழமை கட்சிகள், நக்சல் இயக்கங்கள், திமுக ஆதரவு ஊடகங்கள் ஒவ்வொரு விவசாயியையும் வலுக்கட்டாயமாக அழவைத்து அவர்களை வீடியோ எடுத்து எப்படி இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினார்கள் என்பதை மறக்க முடியாது. 90 சதவீத விவசாயிகள் நிலங்களை வழங்க ஒப்புக்கொண்டு, அங்கு அளவீடு பணிகளும் முடிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சூழல் இருந்த நிலையில், எஞ்சியிருந்த விவசாயிகளை தங்கள் கைகளுக்குள் போட்டு கொண்டு திமுகவும் அதன் சார்பு ஊடகங்களும் ஆடிய ஆட்டங்களை மறக்க முடியாது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களவையில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை குறித்து பேசிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு சில விஷயங்களை கோடிட்டு காட்டினார். சாலை விரிவாக்கத்துக்காக நிலம் கையகம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டால் 3 மாதங்கள் அல்லது அதற்கு சற்று கூடுதலாக நேரம் எடுத்து கொண்டே அனுமதி தருகின்றனர் என குற்றம்சாட்டியிருந்தார்.
இதையெல்லாம் விட இன்னொரு முக்கியமான விவகாரத்தை இங்கு சுட்டிகாட்ட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை பெருக்குவதற்காக திட்டமிட்ட ஸ்டாலின், வேலைநேரத்தை 8 மணி நேரம் என்பதில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தினார். நிச்சயமாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மைல்கல்லாக இருந்திருக்க வேண்டிய திட்டம். ஆனால் வழக்கம் போல நக்சல்கள், போலி சமூக போராளிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாய் அதனையும் வாபஸ் பெற்றார்.
தமிழ்நாட்டில் இவ்வளவு திறமையாக ஆட்சி நடத்தும், தனது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களை கண்டு அஞ்சும் சர்வாதிகாரி, ஜப்பான் சென்று புல்லட் ரயிலை வேடிக்கை பார்க்கலாமே தவிர, அதனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நினைக்கலாமா என கேள்வி எழுகிறது. இன்னும் விதவிதமாக உடை அணிந்து புல்லட் ரயிலில் பயணம் செய்து புகைப்படம் எடுத்து போடுங்கள் . நம்ம ஆட்சி நடத்துற லெவலுக்கு அவ்ளோ தான் முடியும்