முதலமைச்சர்கள் சிலர் செம்மையான நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மனங்களை ஈர்க்கின்றனர். ஆனால் மற்ற முதலமைச்சர்கள் செம்மையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் வெறுப்பை ஈட்டுகின்றனர். முதலாவது நிலைப்பாட்டுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் 2-வது நிலைப்பாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர்.
நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக்கும் முதலமைச்சராக இருந்துள்ளார். மு.க.ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் முதலமைச்சராக இருந்துள்ளார். இத்துடன் ஒற்றுமை முடிந்து விடுகிறது. ஆனால் வேற்றுமைகள் ஏராளமாக உள்ளன.
பிஜூ பட்நாயக் சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தலைசிறந்த விமானியும் ஆவார். அதுமட்டுமல்லாமல் கலிங்கா ஏர்-லைன்ஸ் என்ற பெயரில் விமான சேவையையும் நடத்தி வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வந்த பிஜூ பட்நாயக், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்து காங்கிரசில் இருந்து வெளியேறி உத்கல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். பிறகு 1977-ல் உத்கல் காங்கிரசை ஜனதா கட்சியில் அவர் இணைத்தார். பிஜூ பட்நாயக் 1997-ல் மறைந்தார். ஒடிசாவின் புரிநகரில் உள்ள கடற்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கு 600 சதுரடியில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
தனது தந்தையின் பெயரைக் கொண்டு பிஜூ ஜனதா தளத்தை அவரது மகன் நவீன் பட்நாயக் தொடங்கினார். இப்போதுள்ள முதலமைச்சர்களில் நவீன் பட்நாயக்தான் அதிக காலம் முதலமைச்சராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவரது ஆட்சிக் காலம் 23 ஆண்டுகளைக் கடந்து விட்டது. வெள்ளி விழாவை அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார். ஒடிசாவின் புரிநகரில் உள்ள ஸ்வர்க்கத்வாரா, புரி ஜெகநாதர் கோவிலில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ளது. இந்த கடற்கரையில் உடல்களை தகனம் செய்தால் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்பது ஐதீகம்.
இந்த தகனத் தலத்தை விரிவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு பிஜூ பட்நாயக்கின் நினைவிடம் இடையூறாக இருந்தது. இதையடுத்து தனது தந்தையின் நினைவிடத்தை அகற்ற நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு முழு ஆதரவு அளித்தனர்.
“எனது தந்தை பிஜூ பட்நாயக் மக்களின் மனங்களில் வாழ்கிறார். கல், செங்கல் கட்டிடத்தில் வாழவில்லை” என நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தகனத்தலம் ஒன்றை விரிவாக்க தந்தையின் நினைவிடத்தை அகற்றிய முதல்வர் நவீன் பட்நாயக்.
கடல் மாசுபட்டாலும் பரவாயில்லை, தந்தையின் நினைவிடம் அங்கு வேண்டும் என செயல்படுபவர் ஸ்டாலின்.
ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கும் புகழார்ந்த உதாரணமாகத் திகழ்கிறார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். ஒரு முதலமைச்சர் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கும் எவ்வாறு இயங்கக் கூடாது என்பதற்கும் இகழார்ந்த உதாரணமாகத் திகழ்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நினைவகம் எழுப்பப்பட்டுள்ளது. இதுவே அளவுக்கு அதிகமானதுதான். இந்நிலையில் மெரினா கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னத்தை எழுப்ப தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. இதில் நல்ல முடிவு வரவேண்டும் என்பதே பொதுநல ஆர்வலர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாகும்.
மெரினா கடலுக்குள் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க அவசியம் எதுவும் இல்லை. இவ்வாறு அத்துமீறி நினைவுச் சின்னத்தை அமைத்தால் கடல் மாசுபடும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு இலக்காகும்.
இந்நிலையில் கருணாநிதிக்கு எல்லா மாவட்டங்களிலும் சிலை, தமிழகமெங்கும் 200 சிலைகள் என அறிவிப்பு வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கருணாநிதிக்கு அரசு பணத்தில் மேலும் மேலும் நினைவுச் சின்னம் அமைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. வேண்டுமானால் கோபாலபுரம் இல்லத்திலோ அல்லது முரசொலி அலுவலகத்திலோ அல்லது தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்திலோ ஸ்டாலின் அமைத்துக் கொள்ளட்டும்.
செய்தக்க செய்து எழுச்சியுறுகிறார், நவீன் பட்நாயக். செய்தக்க அல்ல செய்து வீழ்ச்சியுறுகிறார் மு.க.ஸ்டாலின்.
நவீன் பட்நாயக்கிடம் இருந்து மு.க.ஸ்டாலின் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது. இதற்கு மேல் எதையும் சொல்ல விரும்பவில்லை.
-ஆர். பி. எம் .