அண்மையில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்கம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு மதுபாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடப்பதாக தகவல் வந்த நிலையில், தற்போது பாசி மிதப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு முன்பாக தஞ்சாவூரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்திய இரண்டு பேர் பலியானார்கள். சையனைடு கலந்த மதுவை அருந்தியதால் தான் அவர்கள் மரணித்ததாக காவல்துறை வழக்கை மாற்றிய நிலையில், தற்போது விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை எல்லாம் சுட்டி காட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க திறன் இல்லாத அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவால் ஏற்படும் உயிரிழப்பிற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தெருவுக்குத் தெரு மது கடைகளை திறந்து வைத்ததின் விளைவாக மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு அரங்கேறி இருப்பதாகவும் அவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்