பொறுப்பேற்குமா திராவிட மாடல் அரசு
தந்தையின் குடிப்பழக்கத்தால் கடந்த 05.06.2023 அன்று 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. பிரபுவின் மனைவி கற்பகம் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒருமகனும், மகளும் உள்ளனர். மகள் விஷ்ணு பிரியா, குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படித்து நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றார்.
பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போடுவதை வழக்கமாக்கியுள்ளார். இதனால் வீட்டில் மகிழ்ச்சி இல்லாததால் தினமும் சண்டை சச்சரவென இருந்த சுழலில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு கொண்டார். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த கற்பகம் கதவை திறந்து பார்த்த போது விஷ்ணுபிரியா சடலமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளர்.
இது சம்மந்தமாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யும் போது, அவரது வீட்டில் விஷ்ணு பிரியா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது..
அந்த கடிதத்தில், ‘என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும். போயிட்டு வரேன்’ என எழுதி இருந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில் தெரிவித்ததாவது: ” தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர் பலியானார்கள். சயனைட் கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம் என்று அந்த வழக்கை, அதன் பின்னர் விசாரிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கைவிட்டுவிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயங்கி வரும் பார்கள் அனுமதி இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மது பாட்டிலுக்குள், பாசி மிதப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. இவற்றை அடுத்து, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக, மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால், இவற்றைப் பற்றிக் கவலையில்லாத திமுக, மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?” என தெரிவித்திருந்தார்.
இளம் சிறார்களை தற்கொலைக்கு துண்டியதற்கு அவர்களது தந்தை மட்டும் காரணமல்ல, ஆங்காங்கு டாஸ்மாக்கை திறந்து லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்து வரும் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் 10லட்சம், கள்ளச்சாராயம் பாதிக்கப்பட்டால் 50ஆயிரம் என உயிருக்கு விலை பேசும் திராவிட மாடல் தலைவர்களும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என பல ஆண்டுகளாக வாய் சொல்லாகவே சொல்லிவரும் திராவிட கட்சிகள், தமிழகம் தான் அதிக அளவில் இளம் விதவைகளை கொண்டுள்ளது என மேடையில் பேசிய தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, உள்ளிட்ட திராவிட, கம்யூனிச சிந்தாந்தவாதிகள் ஆங்காங்கு தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களை பற்றி பேசாதது ஏன்?
இது போன்ற குழந்தைகள் தற்கொலை செய்வது ஒருவிதமான அரசு வன்கொடுமையே என்பதை உணர்த்துகிறது. பூரண மது விலக்கு கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இது போன்ற மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு பின்னும் மனம் இளகி மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு விரைந்து மதுக்கடைகளை மூட வேண்டும் என நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தேனி மாவட்டம் கம்பம் பகுதிய சேர்ந்த 12ம்வகுப்பு மாணவர் அப்துல் கபூர் தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிடக்கோரி வற்புறுத்திவந்த சுழலில் கண்டு கொள்ளாமல் இருந்த தந்தையால் விரக்தி அடைந்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவு கூரத்தக்கது.