தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் விதிகளை மீறி சிறுவர்களை பணிக்கு அமர்த்தியதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதனை அத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுத்து வருகிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மனோ தங்கராஜ் பொய்யுரைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவல நிலைக்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சரே பொறுப்பு.
பால்வளத்துறை அமைச்சர், சிறார்கள் ஆவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், உண்மை நிலை நேரெதிராக இருக்கிறது. சிறார்கள் ஆவின் நிறுவனத்தில் பணி செய்திருப்பதற்கான காணொளி ஆதாரங்கள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. ஆனாலும் அமைச்சர் இன்னும் உண்மையை மறைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகள், அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, தமிழகம் சார்பாக மாணவர்களைத் தேர்வு செய்யாமல் அவர்கள் எதிர்காலத்தை வீணடித்திருக்கும் திறனற்ற திமுக அரசு, தற்போது, குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.
உடனடியாக, சிறார்களை பணியில் அமர்த்திய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரரை மேற்கொண்டு அரசு பணிகளில் இடம்பெறாத வண்ணம், கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.