கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், ‘ஜல் ஜீவன்’ திட்டம் திறம்பட செயல்படுத்தப் பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டுள்ளதாக மத்திய மோடி அரசை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் வசதி அளிக்கும், ‘ஹர் கர் ஜல்’ என்ற திட்டத்தை, மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகம் கடந்த 15.08.2019 ல் கொண்டுவந்தது.
‘ஜல் சக்தி மிஷன்’ என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வரும் 2024க்குள் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம், கழிப்பறை மற்றும் துாய்மை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த திட்டத்தை உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் எனப்படும் ஐ.நா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியமும் இணைந்து கண்காணித்து வருகின்றன.
இந்த ’ஹர் கர் ஜல்’ திட்டம் வாயிலாக நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்கள், 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளன. இத்திட்டம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கை வருமாறு:
அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் என்ற இந்த திட்டத்தின் வாயிலாக, வயிற்றுப்போக்கு நோய்கள் சார்ந்த நான்கு லட்சம் மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த சாதனையால், 8 லட்சம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகி உள்ளது.
இந்த திட்டம் செயல்பாட்டு வருவதற்கு முன், கிராமப்புறங்களில் குடிநீர் வினியோகம் என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவீதமும், கிராமப்புற மக்கள் தொகையில் 44 சதவீதமும், வீடுகளில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
பாதுகாப்பற்ற குடிநீரை அருந்தியது, கடுமையான உடல்நலம் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 2019ல் மட்டும், சுத்த மான குடிநீர், கழிப்பறை மற்றும் துாய்மை வசதி இல்லாத காரணத்தால், 14 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும், குடிநீர் பிடித்து வருவதற்காக தினமும் நீண்ட துாரம் சென்று வரும் பெண்கள் மற்றும் சிறுமியரின் நேரத்தையும், ஆற்றலையும் இத்திட்டம் மிச்சப்படுத்தி உள்ளது.
கடந்த 2018 நிலவரப்படி இந்தியப் பெண்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 45 நிமிடங்களை குடிநீர் பிடிப்பதற்காக செலவிட்டு வந்தனர். ஒட்டு மொத்தமாக நாள் ஒன்றுக்கு நாடு முழுதும் 6.66 கோடி மணி நேரங்கள் செலவாகின.
ஹர் கர் ஜல் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், உயிர் இழப்புகள் தடுக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சிறுமியர் வாழ்வு மேம்பட்டு, வாழ்க்கை எளிதாகி உள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வில் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியாக இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்திய திட்டம் வேறொன்று இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியீட்டு விழா, புதுடில்லியில் கடந்த ஜூன் 09.06.2023 அன்று நடந்தது.
இதில், சுகாதாரத்துறைக்கான நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவு துறை செயலர் வினி மகாஜன், ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் ஜெனரலும், சுகாதார ஆராய்ச்சித்துறை செயலருமான டாக்டர் ராஜிவ் பாஹல், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் ரோடரிகோ எச்.ஆப்ரின் ஆகியோர் பங்கேற்றனர்.
கிராமம் தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்ற நிலையைக் கடந்து வீடு தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொண்டு சேர்க்கும் இத் திட்டத்தால் கிராமப் புற மாணவிகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது, பெண்கள் முன்னேற்றத்தில் மோடி அரசு கொடுக்கும் கவனம் தாய்மார்களை மோடியின் பக்கம் ஈர்த்துள்ளது!