திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கவர்னர் குறித்தும், பாஜக பொறுப்பாளர் நடிகை குஷ்பு பற்றியும் இழிவுபடுத்தி பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானதால் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அவரது ஆபாசப் பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ”என்னை சீண்டிப்பார்க்க வேண்டாம். எந்த இடத்தில் இருந்தாலும் சரி.. பெண்ணை இழிவாக பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற வகையில் அவர் மீது வழக்கு தொடர்வேன். அவரை செருப்பாய் அடிக்கலாம். ஆனால் அது என் செருப்புக்கு அவமானம்” என கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை வடக்கு மாவட்ட திமுக பேச்சாளராக இருந்த, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர், கடந்த 17.06.2023 அன்று அமைச்சரவை இலாகா மாற்றம் தொடர்பாக கவர்னரின் முடிவு குறித்தும், கவர்னரின் தாயார் பற்றியும், இழிவுபடுத்தி பேசினார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பற்றியும் தரக் குறைவாகப் பேசினார்.
சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் பேச்சுக்கு பல தரப்பினரும் கடும் கண்டனத்துடன் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை இழிவுப் படுத்தி பேசும் வீடியோவை பதிவிட்டு கடும் கண்டனத்தை பதிவிட்டு இருந்தார்.
சென்னையில் கடந்த 18.06.2023 அன்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்ததாவது:. “பெண்கள் எங்கேயும் இழிவாக பேசுவதில்லை. பெண்களை இழிவாக பேசுபவர்கள் உங்கள் தாயின் வளர்ப்பை இழிவுபடுத்துவதாகத்தான் அர்த்தம். திமுகவின் தாய் தந்தையாக கருணாநிதி இருக்கிறார். திமுகவினரின் இத்தகைய பேச்சு கருணாநிதியை இழிவுபடுத்துவது போல் உள்ளது. அது தெரியாமலே இவர்கள் ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும்.
பெண்களை அவதூறாக பேச உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என் வீட்டில் நாளைக்கு 10 பேர் வந்து கல் வீசினாலும் எனக்கு அதைப்பற்றி கவலை கிடையாது. இதே மாதிரி ஏற்கனவே கல் வீசியிருக்கிறார்கள். எனவே அதை எப்படி சந்திக்க வேண்டும் என எனக்கு தெரியும். என்னை சீண்டி பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள். பெண் என்றால் இவ்வளவு இழிவாக போய் விட்டதா உங்களுக்கு..
அரசியல் ரீதியாக பதில் கருத்தை தெரிவியுங்கள். நான் ஒவ்வொரு பெண்ணிற்காகவும் பேசுகிறேன். பெண்கள் பற்றி இழிவாக பேச யாருக்குமே தைரியம் வரக்கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம். பெண்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். யாரையும் நம்பி நான் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. என் திறமையை மட்டும் நம்பி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். என்னை சீண்டிப்பார்க்க வேண்டாம். எந்த இடத்தில் இருந்தாலும் சரி.. பெண்ணை இழிவாக பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்..
திமுகவில் இருந்து பாஜக உறுப்பினரை கேவலமாக பேசியதாக இது கிடையாது. திமுகவில் இருந்து ஒரு பெண் குறித்து அசிங்கமாக பேசியிருக்கிறார். கேவலமான வார்த்தைகளை மேடையில் பயன்படுத்தியுள்ளார். இது போன்ற நபர்களை முட்டிக்கு முட்டி தட்டினால் தான் புத்தி வரும். இல்லையென்றால் புத்தி வராது. கருணாநிதி திமுகவிற்கும் – தற்போதைய திமுகவிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இதுதான் திராவிட மாடலா? ” என ஆவேசமாக குஷ்பு பேசியிருந்தார்.
குஷ்பு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்ததை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
இதே சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ஒரு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் உள்ள மகளிர் பொறுப்பாளர்களான குஷ்பு, கெளதமி, நமிதா, மதுவந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாகப் பேசி பின்னர் மன்னிப்பு கேட்டார். திமுகவும் அவரை சிறிது காலம் சஸ்பெண்ட் செய்திருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.
கருணாநிதி, ஈ.வே.ராமசாமியின் வழிவந்தவர்கள் பெண்கள் பற்றி ஆபாசமாகவும், அறுவறுக்கத் தக்க வகையிலும் பேசுவது ஒன்றும் புதியதல்ல என்றும், தி.மு.க. தலைவர்கள், ஈனத்தனமாகவும், அநாகரீகமாவும் ஒரு தலைவரை விமர்சனம் செய்வதில் கில்லாடிகள் என்பது உலகிற்கு தெரிந்த ரகசியமாகும்.
தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரை தான் இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என நாகூாமல் எழுதியவர்.
அரைநிர்வாணக் கோலம் கொண்டு, ஆட்டுப்பால் அருந்தி, அந்தராத்மாவுடன் அளவளாவத் தொடங்கினாரோ, என வர்ணனை செய்தவர் அண்ணாதுரை.
சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி அசிங்கமாக பதில் சொன்னவர் தான் கருணாநிதி.
இப்படி திமுகவின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஆபாசமாக பேசுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை இன்றுவரை திராவிட மாடல் நிருபித்துவரும் சுழலில் கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்தும், கைது செய்திருப்பதும் திமுகவினரின் நாடகம் தான் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.