பிரதமர் மோடி ஆட்சியில் மட்டுமே இலங்கை பிரச்னைக்கு  தீர்வு – பிரிட்டனில் தலைவர் அண்ணாமலை

பிரதமர் மோடி ஆட்சியில், இலங்கை பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், எப்போதுமே, யாராலும் தீர்க்க முடியாது என பிரிட்டன் பார்லிமென்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பிரிட்டனில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் என்பதால், அவர்களின் பிரச்னையை மையப்படுத்தி, பிரிட்டன் பார்லிமென்டில் உள்ள, ‘ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்’ அரங்கில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 27.06.2023 அன்று பேசினார்.

அவர் பேசியதாவது: ’1987 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இது வரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அன்றைய காங்கிரஸ் அரசு. தனது கடமைகளிலிருந்தும், இலங்கைப் போரைத் தடுக்க வேண்டிய பொறுப்புகளிலிருந்தும் தவறியது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறு.

கடந்த, 2014 ஆண்டுக்குப் பின் பிரதமர் மோடி, இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளார்.  இந்தியாவும் இலங்கையும் நாகரிக இரட்டை நாடுகள் என்று கூறிய முதல் இந்தியத் தலைவர் நமது பிரதமர் மோடி அவர்கள் தான். கடந்த ஒன்பது ஆண்டுகளில், இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, மோடி அரசு செய்துள்ள பணிகள் ஏராளம். இலங்கையின் வடகிழக்கு, மத்திய பகுதிகளில், இந்திய அரசு, தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

யாழ்ப்பாண தமிழ் கலாசார மையத்தை புனரமைத்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரயில் போக்குவரத்து வசதி செய்து தந்துள்ளது. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, சென்னை — பலாலி இடையே தினசரி விமான சேவை நடைபெறுகிறது. காரைக்கால் — காங்கேசன்துறை இடையே, பயணியர் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளது. பொருளாதார பாதிப்படைந்த இலங்கைக்கு, 380 கோடி ரூபாய் கடனுதவி, 40,000 டன் டீசல் மற்றும் பெட்ரோல், காய்கறிகள், உணவு பொருட்கள் என இந்தியா உதவியதால், இலங்கை சரிவில் இருந்து மீண்டது.

இலங்கை வடகிழக்கு பகுதிக்கு சென்றபோது, இலங்கையின் தமிழ் பகுதிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளதையும், ஹிந்து மக்கள் தொகையும் குறைந்து வருவதை அறிந்தேன். தமிழர் விவசாய நிலங்களில் ராணுவ முகாம்கள் அமைப்பட்டு உள்ளால், அவர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே, பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என, இலங்கைப் பயணத்தின்போது, பிரதமர் மோடி வலியுறுத்தினார். அதையே, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும், இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.

இந்த விஷயத்தில், தமிழக பாஜக சார்பிலும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க, மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். பிரதமர் மோடி ஆட்சியில், இலங்கை பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், எப்போதுமே, யாராலும் தீர்க்க முடியாது. என பேசினார்.

************

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top