கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்த திமுக திட்டம் – அண்ணாமலை

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த திறனற்ற திமுக அரசு வழிவகை செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தலைவர் அண்ணாமலை ஜூன் 29 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2000 கல்குவாரிகள் மற்றும் சுமார் 3500 கிரஷர் யூனிட்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் அரசுத் திட்டங்களுக்கு, எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் வினியோகம், இந்த ஆலைகளை நம்பியே இருக்கிறது,
திறனற்ற திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தமிழகத்தில் தொழிற்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்குவாரிகளும் விதிவிலக்கல்ல. கடந்த சில நாட்களாக, குவாரிகளைப் பார்வையிடுகிறோம் என்ற பெயரில் ஒரு கும்பல் தேவையற்ற புகார்களைக் கூறி, ஆலை உரிமையாளர்களை அச்சுறுத்துகிறது என்று குற்றம் சாட்டி, இதனால், தமிழகம் முழுவதும், கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், குவாரித் தொழிலைச் சார்ந்துள்ள, லாரி தொழில், கட்டுமானத் தொழில், மற்றும் தொடர்புடைய சிறு சிறு தொழிலாளர்கள், மற்றும் வீடுகள் கட்டிக் கொண்டிருக்கும் ஏழை நடுத்தர மக்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர், தங்கள் தினசரி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
கால தாமதமின்றி, குத்தகை உரிமம் வழங்கப்பட வேண்டும். சிறு கனிமங்களுக்கு, சுரங்கத் திட்டம் வழியாக குத்தகை உரிமம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.  திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாமதமாகும் குவாரி உரிமம் புதுப்பித்தலை குறித்த காலத்திற்குள் வழங்க வேண்டும். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் போலி ஆர்வலர்கள் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கோரி மிரட்டுபவர்கள் மற்றும் அரசுக்குத் தொடர்பில்லாமல் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். குவாரி உரிமத்திற்குப் பொருத்தமற்ற விதிமுறைகளிலிருந்து விலக்கு வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை குவாரி உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்கள், தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டின் காரணமாக சாலை பணிகள் தாமதமாவதாக குறிப்பிட்டிருந்தார். சாலை பணிகளை துரிதப்படுத்த செய்யவேண்டியதை செய்யாமல் தாமதப்படுத்துவதையே இந்த திறனற்ற திமுக அரசு விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.
நேர்மையான முறையில் தொழில் செய்பவர்களை அச்சுறுத்தி, அதன் மூலம் தமிழகம் முழுவதும் தொழில்துறையில் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கும் திறனற்ற திமுக அரசு, உடனடியாக கல்குவாரி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும், இந்தத் துறை மட்டுமல்லாது, அனைத்து தொழில் துறைகளிலும் சமூக விரோதிகள் தலையிடுவதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top