ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதையை எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்மீது ஊழல் வழக்குகள் இருப்பதால் முதல்வர் பழனிசாமி, குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், தமிழக ஆளுநர் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்,’ என தெரிவித்திருந்தார்.
அதன்பின் அக்டோபர் மாதம், ‘அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர் இப்படி ஊழல் பற்றி பொதுமேடையில் பேசுவது எந்த பயனும் கொடுக்காது. ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அரசியல் சட்டத்துக்கு விரோதமாக ஆட்சி நடத்தி வருபவர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்,’ என மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதன்படி, அதிமுகவில் உள்ள அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், தற்போது அவர் ஆளும் கட்சியான பிறகு இது தவறு எனவும், செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறுகிறார். இது ஆளுநர் அதிகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. தமிழக அரசில் பணிபுரியக் கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் நீக்குவார் என்பதை தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த அரசை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி எந்தவித சட்டதிட்டங்களுக்கும் செந்தில்பாலாஜி உட்படாமல் இருக்கிறார் என முதல்வருக்கு, ஆளுநர் எழுதிய கடிதத்தில் தெளிவாக கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல அமைச்சர்கள் மீதான புகார்கள் உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. அமைச்சர் பொன்முடி மீதும் கூட உயர்நீதிமன்றம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அனைத்து அமைச்சர்களையும் இதுபோல அமைச்சரவையில் நீக்கம் செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.
செந்தில் பாலாஜி ஊழல் செய்திருப்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிகாட்டியதன் அடிப்படையில்தான் ஆளுநர், அவர் மீது மட்டும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்ற விவாதத்துக்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை.
மத்திய அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) ஆளுநர் கலந்தாலோசித்து இது குறித்து மீண்டும் முடிவெடுப்பார். எனத் தெரிவித்தார்..
திமுக எதிர்க்கட்சியாக இறந்த போவது ஸ்டாலின் அப்போதைய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்ட புகைபடங்களையும் , வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது,