மலேசிய தொழில் வர்த்தகர், டத்தோ மாலிக் கைதாகியுள்ள நிலையில், பிரபல தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மீம்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக் தஸ்கீர் 39, முதலில் மலேசியாவில் ஜவுளிக்கடை ஊழியராக வாழ்க்கையை தொடங்கிய இவர், பின்னாளில் திரைப்பட வினியோகம், தயாரிப்பு என தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்திக் கொண்டார். தங்கம், வைரம் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
டத்தோ மாலிக் என்று அழைக்கப்பட்டு வரும் இவர், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.
நடிகைகளை தனி விமானத்தில் அழைத்துச் சென்று, வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பதில், மாலிக் திறமை சாலியாக இருப்பார். அது மட்டுமின்றி நடிகைகள் இவரை ‘முதலாளி’ என்றே அழைப்பார்களாம்.
நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தை மலாய் மொழியில் தயாரித்து, வினியோகம் செய்து பிரபலமானார். தற்போது சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய போலீசார் நேற்று (ஜூலை 25) அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது போன்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால் சொத்துக்கள் உடனடியாக முடக்கப்படும். அதன்படி, மடத்தோ மாலிக் சொத்துக்களும் முடக்கப்பட்டு உள்ளது. தற்போது டத்தோ மாலிக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழ் நடிகர், நடிகைகள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு வேலை சட்ட விரோத பண பரிமாற்றம் நடிகர், நடிகைளுக்கும் நடைபெற்றிருக்கலாம் எனவும் அதன் மூலம் மலேசியாவில் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கலாம் அந்த சொத்துக்கள் தற்போது முடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. விரைவில் உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.