சென்னையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 16ல் நடைபெற்ற ஜி20 பாலி உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜி20 தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டது.
அதன்படி இந்தியாவின் ஓராண்டுகால ஜி20 தலைமைத்துவ பொறுப்பு 1 டிசம்பர் 2022 அன்று தொடங்கப்பட்டு வருகின்ற 30 நவம்பர் 2023 வரை இருக்கும். முன்னதாக 2022ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஜி20 இலச்சினையும், ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் “வசுதெய்வ குடும்பகம்& ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” போன்றவற்றை பிரதமர் முன்மொழிந்து தொடங்கி வைத்தார்.
நமது தேசியக்கொடியின் வண்ணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜி-20 இலச்சினை, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பூமிக்கு ஆதரவான நமது அணுகுமுறை மற்றும் வளர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருந்தது.
ஜி20ன் உறுப்பு நாடுகள், (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக்குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி20 உறுப்பினர்களின் பங்களிப்பு சுமார் 85 சதவீதமாகும். மேலும், இது உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 75 சதவீதமாகும். அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் 200-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், சென்னையில் ஜி-20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழு மாநாடு ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், மேற்கண்ட மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று (ஜூலை 26) மாலை 5 மணி முதல் 6 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களையும், கடற்கரை கோயிலையும் நேரில் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் புரதான சின்னங்களின் வரலாற்று சிறப்புகளை வெளிநாட்டினருக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. ஜி-20 பிரதிநிதிகள் வருகை தொடர்ந்து மாமல்லபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-வ.தங்கவேல்