டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மாநாட்டு மைய வளாகத்தை நேற்று (ஜூலை 26) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசியதாவது;
மத்தியில் பாஜக 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும்போது இந்தியா 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என்றார். அந்த மையத்துக்கு ‘பாரத் மண்டபம்’ என்றும் பெயர் சூட்டினார்.
பிரகதி மைதானத்தில் உள்ள பழைய கட்டுமானங்களுக்கு மாற்றாக புதிய கட்டுமானங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. சுமார் 123 ஏக்கர் பரப்பில் அமைந்த இந்த வளாகம் ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டது. பிரகதி மைதானத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் வளாகத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற வழிபாட்டிலும் பங்கேற்றார். தொடர்ந்து, அவர் வளாக கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அந்த வளாகத்துக்கு ‘பாரத் மண்டபம்’ எனப் பிரதமர் மோடி பெயர் சூட்டினார். அப்போது அவர் கூறுகையில், அடுத்து 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும். பாஜக ஆட்சிக்கு வரும்போது 2014ம் ஆண்டில் இந்தியா 10வது பொருளாதார சக்தியாக இருந்தது. தற்போது 5வது இடத்துக்கு இந்தியா உயர்ந்துள்ளது.
மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது, இந்தியா 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாக நீதி ஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் விமான நிலையங்கள் முதல் ரயில் நிலையங்கள் வரை கட்டுமானங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களையும், நாட்டையும் மையமாகக் கொண்ட திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில்தான் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. அதன் மூலமாக சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு மேலும் உயரும். இந்த மண்டபமானது கருத்தரங்கம் சார்ந்த சுற்றுலாவையும் மேம்படுத்தும். நாட்டில் ஏற்படும் வளர்ச்சிப் பணிகளை எதிர்மறை கண்ணோட்டத்துடன் சிலர் தடுத்து வருகின்றனர். அவர்கள் பாரத் மண்டபத்தையும் விரைவில் ஏற்றுக்கொளவர்’ என்றார்.
-வ.தங்கவேல்