இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்க உதவும் 13வது சட்டத்திருத்தத்தை முழுவமையாக அமல்படுத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவு தேவை என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தி மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்த ஆலோசிக்க அதிபர் ரணில் தலைமையில் நேற்று (ஜூலை 26) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கைத் தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டணி, முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அதிபர் ரணில், 13வது சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்துவது நாட்டுக்கு மிக முக்கியம். இது ஏதோ தமிழ் கட்சிகளுக்கானது என மட்டும் நினைக்க வேண்டாம். இந்தப் பேச்சுவார்த்தையில் அனைத்துக் கட்சிகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இலங்கையில் மொத்த 9 மாகாணங்களில் 7 மாகாணங்களில் சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசிடம் உள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பிரித்து அளிக்கப்பட வேண்டும். மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரம் அளிக்கப்படுவது பற்றி அனைத்து கட்சிகளும் ஆலோசித்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீண்டநாள் கோரிக்கை தற்போது பிரதமர் மோடியால் நிறைவேற இருப்பது இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியே. காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின்போது இலங்கைத் தமிழர்களுக்கு துரோகமே இழைத்தனர் என்பது வரலாறு.
-வ.தங்கவேல்