மணிப்பூர் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பது தெளிவாகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மழைக்கால கூட்டத்தொடரின் 8வது நாளான நேற்று (ஆகஸ்ட் 1) நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
இது பற்றி செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்கும் போதெல்லாம் கூச்சலிட்டு எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தினர். பிரதமர் பேசுவதை அவர்கள் எப்போதும் கேட்பதில்லை. ஆனால் தற்போது, அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்பது என்ன ஒரு கேலிகூத்து.
எதிர்க்கட்சிகளின் விருப்பப்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள்? மணிப்பூர் குறித்து கவலைப்படுகிறார்களா அல்லது அரசியலுக்காக, இதை அவர்கள் செய்கிறார்களா? மணிப்பூர் மக்களிடம் கேட்டறிந்தவை பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவிக்க வேண்டும். அவர்கள் இலக்குகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அணிந்த கருப்பு உடையைப்போல் அவர்களின் எண்ணங்களும் கருப்பாக இருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது மணிப்பூரில் அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது எந்த உள்துறை அமைச்சர் மணிப்பூரைப் பார்வையிட்டார்? ஆனால், பாஜக ஆட்சியில் எங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பது தெளிவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.