சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மூச்சுக்குழாய் வழியாக மருந்து செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மூச்சுக்குழாய் வழியாக மருந்து செலுத்த வேண்டிய மருத்துவ உபகரணங்கள் அங்கு இல்லை என்பதால் டீக்கடைகளில் உபயோகிக்கும் பேப்பர் கப்புகளை வாங்கி வந்து அதன் மூலம் மாணவனின் மூக்கு வழியாக மருந்தை செலுத்தியுள்ளனர். இந்த காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியது.
திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல மாவட்டங்களில் எழுகிறது. அதே சமயம் சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு மாற்று மருந்தை கொடுத்து அனுப்பும் அவலநிலையும் தொடர்கதையாக உள்ளது. இதனை சரிசெய்ய கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக பதிவிடுபவர்களை கைது செய்வது போன்ற சிறுபிள்ளைதனமான செயல்களில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.