சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடு தோறும் தேசிய கொடி ஏற்றும் விதமாக தபால் அலுவலகங்களில் ரூ.25க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ரூ.25க்கு தேசியக் கொடி விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தேசியக் கொடியை குறைந்த விலையில் வாங்கிச்செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
இது பற்றி திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்கும் வகையில் திருப்பூர் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களிலும் ஓரிளு நாட்களில் தேசியக் கொடி விற்பனைக்கு வரவுள்ளது. தேசியக் கொடிக்கு ரூ.25 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் அஞ்சல் ஊழியர்கள் மூலமாக வீடுகளுக்கே தேசியக் கொடி விநியோகம் செய்யப்படும்.
அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தேசியக் கொடியை வாங்க விரும்பினால் திருப்பூர் கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், தாராபுரம் தலைமை அஞ்சலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கள் அறிக்கை விடுத்திருப்பதாக தெரிய வருகிறது.