மீன் வளம், கால்நடை வளர்ப்புக்கு கடன் வழங்குவதில், மண்டல ஊரக வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும், என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் ஆய்வு கூட்டம், சென்னையில் (ஆகஸ்ட் 4) நேற்று நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.
இதில் தென்மாநில நிதித்துறை செயலாளர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்பாடுகள் பற்றி, விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் ஜீவன் ஜோதி, பீமா யோஜனா இன்ஸ்சூரன், பிரதமர் சுரக் ஷா, பீமா யோஜனா, பிரதமரின் வீதியோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி, அடல் பென்ஷன் திட்டம், முத்ரா திட்டம், கிசான் கடன் அட்டை திட்டம், உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
தொழில்நுட்பம், கோர் பேங்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அனைத்து செயல்பாடுகளையும் குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சேவை செய்ய, புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீன் வளம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு நிதியமைச்சர் பேசினார்.