ஊழல் மற்றும் குடும்ப அரசியலையும் மக்கள் வெறுத்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 508 ரயில் நிலையங்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான அடிக்கல்லைக் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 7) நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்: நாட்டில் தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. சில எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக, தாங்களும் எதுவும் செய்வதில்லை. மற்றவர்களையும் எதுவும் செய்ய விடுவதில்லை.
நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்கும் நாடாளுமன்றமானது அரசு, எதிர்க்கட்சிகள் என அனைத்துத் தரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கியது. ஆனால், எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்றத்தையும் விமர்சித்தன.
டெல்லியில் ராஜபாதையானது ‘கடமைப் பாதையாக’ மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதையும் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு அமைக்கப்பட்ட ‘ஒற்றுமை சிலையானது’ உலகின் மிகப்பெரிய சிலையாக விளங்குகிறது. அதைக் கண்டு இந்தியர்கள் அனைவருமே பெருமைப்படுகின்றனர். ஆனால், ஒரு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமே அந்தச் சிலையை நேரில் கண்டு மரியாதை செலுத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபபாய் படேலை தேர்தல் நேரத்தில் மட்டுமே சில கட்சிகள் நினைவில் கொள்கின்றன.
போரில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 70 ஆண்டுகளாக எந்த நினைவிடமும் எதிர்க்கட்சிகளால் அமைக்கப்படவில்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசு போர் நினைவிடத்தை டெல்லியில் அமைத்தது. ஆனால் அதை கூட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதற்காக எதிர்க்கட்சிகள் வெட்கப்படவில்லை.
நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. வாக்கு வங்கி அரசியலில் பாஜக ஈடுபடவில்லை. நாட்டில் உள்ள 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளை வழங்கும நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை இது வெளிக்காட்டுகிறது. இளைஞர்களுக்கு தற்போது புதிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்களித்து வருகின்றனர்.
வரிகள் மீதான மக்களின் கண்ணோட்டத்தை மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது. அதன் காரணமாக, நாட்டில் தற்போது வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் வருமானம் பெறுபவர்களிடம் இருந்துகூட வரி வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.