அயோத்தி ராமர் கோவிலுக்கு உத்தர பிரதேச மாநிலம், அலிகரைச் சேர்ந்த வயது முதிர்ந்த தொழிலாளி 400 கிலோ எடை கொண்ட பூட்டைத் தயாரித்து வருகிறார்.
கைகளால் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு அலிகர் நகரம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நகரைச் சேர்ந்த வயது முதிர்ந்த தொழிலாளியான சத்ய பிரகாஷ் சர்மா, அயோத்தி ராமர் கோவிலுக்கான 400 கிலோ எடை கொண்ட பூட்டை பல மாதங்களாகத் தயாரித்து வருகிறார். கைகளால் தயாரிக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய பூட்டு இதுவாகும்.
ராமரின் தீவிர பக்தரான சத்ய பிரகாஷ் சர்மா கூறியதாவது: தனது குடும்பத்தினர் காலம், காலமாக பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் அலிகரில் தாம் 45 ஆண்டுகளாக பூட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்வதாகவும் கூறினார்.
தற்போது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக அவர் 10 அடி உயரம், 4.5 அடி அகலமும், 9.5 அங்குல தடிமனும் கொண்ட பூட்டையும் 4 அடி நீளம் கொண்ட சாவியையும் தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அலிகரில் நடைபெற்ற பூட்டு கண்காட்சியில் தனது தயாரிப்பை சத்ய பிரகாஷ் சர்மா காட்சிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தப் பூட்டைத் தயாரிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பணியாகும். இதில் என் மனைவி ருக்மிணியும் எனக்கு உதவி வருகிறார். அயோத்தி கோவிலுக்காக நாங்கள் 6 அடி உயரம் கொண்ட பூட்டைத் தயாரித்தோம். எனினும் அதை விடப் பெரிய பூட்டைத் தயாரிக்குமாறு சிலர் எங்களுக்கு ஆலோசனை கூறினார்.
எனவே மிகப்பெரிய பூட்டைத் தயாரித்து வருகிறோம். இந்தப் பூட்டைத் தயாரிக்க ரூ.2 லட்சம் செலவானது. எனது இந்த கனவுத் திட்டத்தை நனவாக்குவதற்காக எனது வாழ்நாள் சேமிப்பை இத்திட்டத்துக்காக செலவழித்துள்ளேன் என்றார்.
அயோத்தி ராமர் கோவிலில் வரும் ஜனவரி 21,22,23 தேதிகளில் சிலைப் பிரதிஷ்டை வைபவத்தை கோவில் அறக்கட்டளை நடத்த உள்ளதாகவும் இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் அண்மையில் கூறியிருந்து இங்கு நினைவு கூரத்தக்கது