எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் இதுவரை செய்துள்ள ஊழல் ரூ.12 லட்சம் கோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலம், மான்சா நகரில் தேசிய பாதுகாப்பு முகமை பிராந்திய மையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு நடைபெற்ற பொதுமக்கள் மத்தியில் அமித்ஷா கூறியதாவது: முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற இருந்தவர்கள் இப்போது பெயரை ‘இ.ந்.தி.யா.’ கூட்டணி என்று மாற்றியுள்ளார்கள்.
ஏனெனில், அவர்கள் பழைய பெயரிலேயே போட்டியிட்டால் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் செய்த ஊழல் அந்த அளவுக்கு மோசமானவை. அக்கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் இதுவரை செய்துள்ள ஊழல் ரூ.12 லட்சம் கோடி ஆகும். எனவே பெயரை மாற்றி மாறுவேடமிட்டு வாக்குகளைப் பெற முயற்சித்து வருகின்றனர். அவர்களிடம் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.
‘பழைய மொந்தையில் புதிய கள்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது ‘பழைய மொந்தையில் பழைய கள்’ என்பது போலவே உள்ளது. நாட்டு மக்களின் பேராதரவுடன் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
நம்மில் பலருக்கு சுதந்திரப் போராட்டம் குறித்து நேரடியாகத் தெரியாது. நாட்டுக்காக தியாகங்களைச் செய்ய நமக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இப்போது நாட்டுக்காக உயிரைக் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. அதே நேரத்தில் நமது குழந்தைகளை நாட்டுப் பற்றி மிக்கவர்களாகவும், நமது மொழி, இலக்கியம், கலாசாரம், ஊர், மாநிலம், தேசத்தின் மீது மாறாத பற்று கொண்டவர்களாகவும் வளர்க்க வேண்டும்.
இந்தியா பல நூற்றாண்டுகளாக உலகுக்கே வழிகாட்டியாக திகழ்ந்துள்ளது. இப்போது மீண்டும் இந்தியா ஓர் உன்னத நிலையை நோக்கிப் பயணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் 11 இடத்தில் இருந்து முன்னேறவில்லை. அதே நேரத்தில் மோடி ஆட்சி காலத்தில் இந்தியப் பொருளாதாரம் 5வது இடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி, விண்வெளி ஆராய்ச்சி, ராணுவம், பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் நாம் புதிய இலக்குகளை எட்டிப் பிடித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.