டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், முப்படை மற்றும் டெல்லி போலீசாரின் அணி வணக்கத்தை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முப்படைகளில் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார் பிரதமர் மோடி. அப்போது தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மீதிருந்து தேசியக் கொடிக்கு மலர்கள்  தூவப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: 

என் அன்பிற்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு சுதந்திர தினவிழா கொண்டாடுகிறார்கள்.

உலகம் முழுவதும் இந்தியாவை விரும்புகின்ற மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய சுந்திரத்திற்காக யாரும் பங்களிக்காமல் இருந்திருக்க முடியாது. சுதந்திர தினத்தில் பங்கேற்றவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்த அனைவருக்கும் எனது மரியாதையைச் செலுத்திக் கொள்கிறேன்.

தற்போது இந்தியாவின் பல இடங்களில் மக்கள் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனவேதனையை தெரிவித்துக் கொள்கிறேன். 

மணிப்பூரில் வன்முறை நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக கொடுமை நடந்துள்ளன. ஆனால் அவை கட்டுப்படுத்தப்பட்டு  தற்போது அங்கு அமைதி நிலவி வருகிறது. அமைதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூரில் முழு அமைதி நிலவ மத்திய மாநில அரசு எல்லா முயற்சிகளும்  எடுத்து வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த காலத்தில் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்ய அனைவரும் தயாராக இருந்தனர். இந்திய விடுதலைக்கான தியாக வேள்வியை நடத்திய வீரர்கள் 1947-ல் வெற்றி பெற்றார்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்து, கனவு நனவானது.

இன்று, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது. வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களில் கூட டிஜிடடல் வளர்ச்சி உள்ளது. நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான திறன் நம்மிடம் உள்ளது. சிறிய நகரங்களின் இளைஞர்கள் கூட தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்துக்  காட்டியுள்ளனர்.

இன்றைய உலகம் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி உலகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அறிவியல் ஆராய்ச்சி குறித்த சாதனைகளிலும் நமது இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றிகள். நாட்டின் வளர்ச்சிக்கு உடல் உழைப்பு தொழிலாளர்களின் பங்கெடுப்பு மிகவும் முக்கியம். இந்தியாவின் உயர்வு, வளர்ச்சி நமது நாட்டின் மீதான உலகத்தின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

விழிப்புணர்வுதான் வன்முறைகளில் இருந்து நமக்கு விடுதலை தருகிறது. 

இளையோர் சக்தியால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மக்களுக்கு நாட்டின் மீதுள்ள நம்பிக்கைதான் உலகிற்கு நம் நாட்டின் மீதான நம்பிக்கை தருகிறது. இந்தியா நவீனத்துவத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் உன்னத வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மிகப்பெரிய இலக்கினை நாம் அடையப் போகிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 கூட்டம் நடத்தப்படுகின்றன. இன்று நாட்டின் ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் புதிய அரசியல் சூழல் உருவாகி வருகிறது. மாறிவரும் சூழலில் நம் 140 கோடி மக்களின் திறமை உற்று நோக்கப்படுகிறது.

நமது வளர்ச்சி நமது கூட்டு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. உலகளவில் முன்பிருந்த நிலைமைகள் மாறிவிட்டன. நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சமமாக வளர்ச்சியடைவதே சரியான முன்னேற்றம். அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு. புதிய இந்தியா தடுக்க முடியாதது, வெல்ல முடியாதது. இவ்வாறு பிரதமர் மோடி தனது சுதந்திர உரையில் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top