மதுரையில் உள்ள ஆவின் பி.எம்.சி.களில் நடக்கும் கலப்பட பிரச்னைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் விற்கப்படும் பாலை ஏழை, எளியோர்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக ஆவின் பாலில் தண்ணீர் அதிகளவு கலப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் குழந்தைகளுக்குப் போதுமான ஊட்டச்சத்துக் கிடைப்பதில்லை.
இந்த நிலையில், மதுரை ஆவினில் கடந்தாண்டு தினமும் 2.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு கொள்முதலில் கடும் சரிவு ஏற்பட்டு பால் பாக்கெட்டுகள் வினியோகம் அடிக்கடி தாமதமாகின்றது. இதற்குக் காரணம் தனியாரிடம் அதிக விலைக்கு உற்பத்தியாளர்கள் பால் விற்பனை செய்வது, ஆவின் பால் விலையை உயர்த்தாதது உள்ளிட்ட பிரச்னைகள் தான்.
இதுதவிர பி.எம்.சி.,களில் பால் ஊற்றும்போது பலர் தண்ணீர் கலப்படம் செய்வதால்,
பாலின் தரம், விலை பாதித்து விடுகிறது. இதனால் ஒரு லிட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தனியாருக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.
இதைத் தடுக்க பி.எம்.சி.,களில் நடக்கும் பால் கலப்படத்திற்கு பொது மேலாளர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது பற்றி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெண்மணிசந்திரன் கூறியதாவது: மதுரையில் 60க்கும் மேற்பட்ட பி.எம்.சி.,களில் பால் உற்பத்தியாளர்களின் பால் சேகரிக்கப்பட்டு அவை டேங்கர்கள் மூலம் ஆவினுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட பாலின் தரம், கொழுப்புச் சத்து, விலை நிர்ணயம் ஆகியவை ஆவினில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்படுவதால் தரமான பால் வழங்கும் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ.34.55 கிடைக்க வேண்டியதற்குப் பதில் ரூ.3 வரை நஷ்டம் ஏற்படுகிறது.
இதற்கு ஒரே தீர்வு பி.எம்.சி.,யிலேயே பால் தரம், விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது தான். தற்போது குறிப்பிட்ட பி.எம்.சி.,களில் மட்டுமே இது நடைமுறையில் உள்ளது. தற்போது தனியார் ஒரு லிட்டருக்கு ரூ.33 மட்டுமே வழங்குகின்றனர். ஆனால் தரமான பாலுக்கு ஆவின் ரூ.34.55 வரை வழங்குகிறது. விரைவில் 60 பி.எம்.சி.,களிலும் தரம், விலை நிர்ணயம் செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட வேண்டும். இதனால் ஆவின் பால் கொள்முதல் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இதன் மீது பொது மேலாளர் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.