ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து இந்தியர்கள் விடுபட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் நினைவுகளை போற்றுகின்ற வகையில் ‘என் மண், என் தேசம்’ என்ற இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 7,500 கலசங்களில் மண் கொண்டு வரப்பட்டு டெல்லியில் அமிர்த பூந்தோட்டம் அமைக்கப்பட இருக்கிறது.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடங்களில் இருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மண் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புரி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரரான ஜயீ ராஜ்குருவின் பிறந்த இடமான பிரஹரேகிருஷ்ணாபூரில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்ணை கலசத்தில் வைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அங்குள்ள பொது மக்கள் வழங்கினர்.
இதனை தொடர்ந்து மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ளவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ‘‘2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த, தன்னிறைவுமிக்க இந்தியாவை உருவாக்க முனைவோம். காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட உறுதிமொழி எடுப்போம். நமது பாரம்பரியத்தைக் காப்பதற்கு உறுதி ஏற்போம் என்றார்.
மேலும் அவர் பேசும்போது, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் திணிக்கப்பட்ட அடிமை மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். அப்போதுதான் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்ய முடியும். அதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது, என்று கூறினார்.