நாடு முழுவதும் சுமார் 100 நகரங்களில், 10,000 இ பேருந்துகள் என்று சொல்லப்படும் பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) நடந்தது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான இ பேருந்துகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 10,000 இ – பேருந்துகளை இயக்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது பற்றி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: ‘பிரதம மந்திரி இ – பஸ் சேவா’ திட்டத்தின் கீழ், 100 நகரங்களில் 10,000 பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகையான 57,613 கோடி ரூபாயில், 20,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கிவிடும். மீதத் தொகையை மாநில அரசுகள் செலுத்தும். இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு பேருந்து இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும்.
பேருந்து வசதி இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு மற்றும் மலை பிரதேசங்கள் அடங்கிய மாநிலங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக 45,000 முதல் 55,000 வரை நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.