சூரியனை ஆய்வு செய்வதற்காக ‛ஆதித்யா -எல் 1’ என்ற விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக சூரியனை நோக்கி பாய்ந்தது. ஜப்பான், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய போகும் 5வது நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் என (இஸ்ரோ) சொல்லப்படும், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது. மொத்தம் 1,480.70 கிலோ எடை உடைய அந்த விண்கலத்தை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘பி.எஸ்.எல்.வி. சி57’ ராக்கெட் இன்று (செப்டம்பர் 2) காலை 11.50 மணிக்கு சூரியனை நோக்கி பாய்ந்தது.
அதன்படி ‘ஆதித்யா எல்1’ விண்கலம் ஒரு மணி நேரம் மூன்று நிமிடங்களுக்கு பின் திட்டமிடப்பட்ட புவி வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. விண்ணில் பாய்ந்த நிலையில் தனது இலக்கை நோக்கி ஆதித்யா எல் 1 பயணிக்கிறது. ராக்கெட் இயல்பாக பயணம் செய்கிறது. செயல்பாடுகளும் இயல்பாக உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள ‘லாக்ரேஞ்ச் எல்1’ மைய புள்ளியில் ‘ஆதித்யா எல்1’ விண்கலம் 125 நாட்கள் பயணத்திற்கு பின் நிலை நிறுத்தப்படும்.
அங்கிருந்தபடி விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏழு அதிநவீன கருவிகள் வாயிலாக சூரியனின் வெளிப்பகுதி வெப்பச் சூழல், வளி மண்டலம் மற்றும் வெப்ப நிலையின் இயக்கவியல், ஒளிவட்டம், கதிர்வீச்சு, காந்தபுலம், சூரிய காற்றின் தன்மை, சூரியனின் எக்ஸ்ரே கதிர் உள்ளிட்டவை பற்றி ஆய்வுப் பணிகளை தொடங்கும். இதன் மூலம் சூரியனால் ஏற்படும் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
ஆதித்யா எல்1 பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:
125 நாட்கள் பயணம் செய்து ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 பகுதியை அடையும். சரியாக 648 கி.மீ., உயரத்தில் ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்தது. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம் சரியான சுற்றுவட்டார பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது: சந்திரயான்3, ஆதித்யா எல்1 வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி கூறியாவது:
ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் திட்டக்குழுவின் கனவு நிறைவேறி உள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விண்கலம் இலக்கை எட்டும் போது அது இந்திய விண்வெளித்துறையின் மிகப் பெரிய பொக்கிஷமாக இருக்கும் வெற்றிக்கு உதவிய வல்லுநர் குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆதித்யா எல்1 பணிகள் பார்ப்போம்:
பூமியோட வானிலையை கணிப்பதை போல விண்வெளிக்கும் வானிலை உள்ளது. இந்த வானிலையில் ஏற்படும் சில மாற்றங்கள் பூமியை மிகக் கடுமையாக பாதிக்கலாம். அதாவது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியன்தான் இந்த விண்வெளி வானிலையை தீர்மானிக்கிறது. இதிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள், கதிர்வீச்சுகள், காந்த துகள்கள் ஆகியவை பூமியில் உள்ள மின்னணு பொருட்களை கடுமையாக பாதிக்கும்.
இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல புயல் ஏற்பட்டால் ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்தியா நீண்ட காலமாக திட்டமிட்டு வந்திருந்தது. அப்படி இந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஆதித்யா எல்1 விண்கலம்.
இதில் மொத்தம் 7 கருவிகள் உள்ளன. இதில் மிக முக்கியமானது விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் தான். இந்தக் கருவி ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதன்மையான கருவியாகும். ஒரு நாளைக்கு சுமார் 1,440 புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும். ஆதித்யா எல்1-ல் உள்ள மொத்த 7 கருவிகளில் நான்கு சூரியனில் இருந்து வரும் ஒளியைக் கவனிக்கும், மீதமுள்ள மூன்று பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை அளவிடும். மொத்தமா 190 கி.கி எடைகொண்ட இந்த ஆதித்யா எல்1, ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்த விஷயங்களை சேகரித்து பூமிக்கு அனுப்பும். இருப்பினும் 5 ஆண்டுகளுக்கு பின்னரும் இதனை மேலும் வேலை செய்ய வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்ய பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்படுகிறது.
சந்திரயான் 3 னின் வெற்றி இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வையை உயர்த்தியது என்றால் ஆதித்யா எல்1 இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வையை முற்றிலும் ஈர்த்திருக்கிறது. விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் அரசு இருந்தால், இந்தியாவால் வானத்தையும் வசப்படுத்த முடியும் என்கின்றனர் நமது விஞ்ஞானிகள்.