திமுக அரசு அறிவித்த பெண்களுக்கு ரூ.1000 நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்த பெண்களை எருமை மாடுகளா.. அறிவு இல்லை.. ஓசி பணம் வாங்க வந்துட்டு உங்களால் நிற்க முடியாதா.. இதில் வேற உட்கார சேர் கேக்குதா? என அரசு ஊழியர் ஒருவர் ஒருமையில் திட்டும் சம்பவத்தால் பெண்கள் மிகவும் மன வேதனைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் உறுதிமொழி கொடுத்திருந்தார். ஆனால் மக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பின்னர் எதையும் செய்யாமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தில் வேறு வழியின்றி குறிப்பிட்ட தகுதி பெற்ற பெண்களுக்கு ஒரு வழியாக ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டது.
அதாவது ஒட்டுமொத்த பெண்களுக்கும் ரூ.1000 வழங்க முடியாது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அந்தர் பல்டி அடித்தார். அதன்படி ஒன்னரை கோடி ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை விட்டுவிட்டு ஒரு கோடி கார்டுக்கும் மட்டுமே பணம் வந்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு கோடி பேரில் பல ஆயிரம் பேருக்கு பணம் வந்து சேரவே இல்லை. வெறும் குறுஞ்செய்தி மட்டுமே வந்துள்ளது. வங்கியில் சென்று பார்த்தால் அது போன்ற பணமே வரவில்லை என பெண்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதனால் பெண்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள, விடுப்பட்டவர்கள் தாலுகா அலுவலகம் மற்றும் இ சேவை மையத்தில் சென்று விண்ணப்பம் அளித்தால் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக அரசு கூறியது. இதனை நம்பி தாலுகா அலுவலகம் செல்லும் பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு இந்த விடியா அரசாங்கம் தள்ளுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மேல்முறையீடு மனு கொடுப்பதற்கான முகாம் நடந்தது. இந்த முகாமில் மேல்முறையீடு செய்யவும், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். எதிர்பார்த்ததை விட அதிகளவில் பெண்கள் குவிந்தனர்.
அதற்கு ஏற்ப அங்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு பெண்கள் முண்டியடித்து கொண்டு இருக்கைகளில் அமர சென்றனர். அதோடு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வேளையில் அங்கு பணியாற்றிய ஊழியர் சிலர் பெண்களை வசைபாடத் தொடங்கினர்.
அப்போது, ‛‛எருமை மாடுகளா… அறிவு இல்லையா… சோத்தை தானே திங்குறீங்க.. ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா.. உக்கார சேர் கேக்குதா?” என கடும் வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவர் திட்டினார். இதனை சில பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்ட நிலையில் சிலர் கண் கலங்கினர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிலர் அந்த ஊழியரை கண்டித்து அவரது பெயர் விபரங்களை கேட்டனர். ஆனால் அவர் எதையும் சொல்லாமல் நழுவினர். இதற்கிடையே கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்களை வாய்க்கு வந்த வார்த்தைகளை பயன்படுத்தி வசைபாடிய ஊழியர் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உண்மையை சொல்வதென்றால், இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. இந்த விடியா அரசு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளுகின்றனர். எப்போது இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என பொதுமக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.