சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!

திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை நாளை,  ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பயண சேவைக்கான  கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 24) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழகத்திற்கு இது மூன்றாவது வந்தே பாரத் ரயில் ஆகும்.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக சென்னை- திருநெல்வேலி இடையே வியாழக்கிழமையும், திருநெல்வேலி- சென்னை இடையே வெள்ளிக்கிழமையும் இயக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணியளவில் சென்னை எழும்பூர் வந்தடைந்தது. தொடர்ந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி சென்றது.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான தொடக்க சேவை நாளை (செப்டம்பர் 24) பிற்பகல் 12 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ள நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மற்றும் தமிழக பாஜ துணைத் ஆதலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தொடக்க சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாலும் பயணிகள் சேவை திங்கள்கிழமை முதல் தொடங்கப்படவுள்ளது. இதன் முதல் பயணிகள் சேவையாக சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (எண் 20665) தாம்பரத்துக்கு பிற்பகல் 3.13 மணிக்கும், விழுப்புரத்துக்கு மாலை 4.39 மணிக்கும், திருச்சிக்கு மாலை 6.40 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 7.56 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கும், விருதுநகருக்கு இரவு 9.13 மணிக்கும் திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கும் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து வந்தே பாரத் ரயில் பயணிகள் சேவை புதன்கிழமை தொடங்கப்படவுள்ளது. செவ்வாய்கிழமை ரயில் சேவை கிடையாது. திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 20666) விருதுநகருக்கு காலை 7.13 மணிக்கும், மதுரைக்கு காலை 7.50 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு காலை 8.40 மணிக்கும், திருச்சிக்கு காலை 9.50 மணிக்கும், விழுப்புரத்துக்கு காலை 11.54 மணிக்கும், தாம்பரத்துக்கு பகல் 1.13 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு பகல் 1.50 மணிக்கும் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top