தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை டெல்லியில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 24) கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெல்லை உள்பட நாடு முழுவதும் ஒன்பது நகரங்களுக்கு நேற்று (செப்.24) வந்தே பாரத்தின் சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வழித்தடத்தில் வந்தே பாரத்தின் முதல் துவக்க நாள் என்பதனால் ரயில்வே ஊழியர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் கட்டணமின்றி பாஸ் வழங்கப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். வந்தே பாரத் ரயிலில் பயணிக்க முன்னதாகவே அனுமதி பெற்றிருந்தவர்கள் காலை 10 மணி முதல் ஆர்வமுடன் வருகை தந்தனர். துவக்க விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதிநவீன வசதிகள் மற்றும் குறுகிய நேரப் பயணம் என்பதால் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள வந்தே பாரத் ரயில், முன்னதாக தமிழகத்தில் சென்னை – கோவை மற்றும் சென்னை – மைசூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. 3வது ரயிலாக நெல்லை – சென்னை இடையே தனது சேவையை தொடங்கியுள்ளது.
டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 24) கொடியசைத்து தமிழ்நாட்டில் வந்தே பாரத்தின் மூன்றாவது சேவையை துவக்கி வைத்தார். பிற்பகல் 12.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத், மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இரவு 7.50 மணியளவில் சென்னையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏசி நிறைந்த நவீன இருக்கைகள், கேமராக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு வசதிகள், மொபைல் சார்ஜிங் போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன.
வந்தே பாரத் சென்னை – திருநெல்வேலி – சென்னை ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி, அடுத்த பத்து நாட்களுக்கு டிக்கெட் விற்பனை முழுமை பெற்றுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக ரயில் இயக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் புதன்கிழமை முதல் திட்டமிட்டபடி வாரத்தில் ஆறு நாட்களுக்கு நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில், இரு மார்க்கமாக இயக்கப்பட இருக்கிறது. தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்தே பாரத் ரயில் அமைந்திருப்பதாகவும், விமானத்தை ஒப்பிடும்போது இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தேசிய அளவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டம், இவ்வளவு சீக்கிரம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என பயணிகள் நெகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். இதனை சாத்தியப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியையும், பாராட்டுகளையும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிற மாநிலங்களில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் புதிய ரயில் சேவை:
நெல்லை – சென்னை, உதய்பூர் – ஜெய்ப்பூர், ஐதராபாத் – பெங்களூரு, விஜயவாடா – சென்னை, பாட்னா – ஹவுரா, காசர்கோடு – திருவனந்தபுரம், ரூர்கேலா – பூரி, ராஞ்சி – ஹவுரா என 9 வந்தே பாரத் ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக நேற்று (செப்டம்பர் 24) தொடங்கி வைத்தார்.