பயங்கரவாதி கொலையில் கனடாவிடம் எந்த ஆதாரமும் இல்லை: மத்திய அரசு!

‘காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எதிராக கனடா அரசிடம் எவ்வித உளவுத் தகவல்களும், ஆதாரங்களும் இல்லை. காலிஸ்தான் குழுக்களின் ஆலோசனையின்படி அவர்கள் செயல்பட்டுள்ளனர்’ என மத்திய அரசு தரப்பின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளனர்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக கனடா சேகரித்த உளவு தகவல்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் மத்திய அரசு தரப்பு உயர் அதிகாரிகள் கூறியதாவது: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பது உளவு தகவல்கள் வாயிலாக தெரிய வந்ததாக கனடா தெரிவித்தது. அந்த தகவல்களை அளிக்கும்படி தூதரக அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் வாயிலாக கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்களால் எந்தவித உளவு தகவல்களையும், ஆதாரங்களையும் அளிக்க முடியவில்லை. இதனால் அப்படி எவ்வித தகவல்களும் அவர்களிடம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதிகள் கூற்றுப்படி கனடா அரசு செயல்பட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதால் சட்ட அமலாக்கத்துறையில் அங்கு பற்றாக்குறை நிலவுகிறது. அங்கு குழுக்களுக்கு இடையே சர்வசாதாரணமாக சண்டைகள் நடக்கின்றன. குடியேற்றம் மிகப்பெரிய தொழிலாக நடந்து வருகிறது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சுலபமாக கொலைகள் செய்துவிட்டு பழியை இந்தியா மீது போடுவது வழக்கமாகி வருகிறது. இந்தியா மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முன் கனடா அரசு அதற்குத் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top