கோவையில் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவையில் இன்று (செப்டம்பர் 26) தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாகப் பிரதமர் மோடி ஆய்வு நடத்திய நிலையில், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி நாடு முழுவதும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டம் மூலம் இன்று 51 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அதன் ஒரு பகுதியாக, கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு மேளா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். வேலை வாய்ப்பு பெற்றவர்கள் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top