500 ஆண்டுகளுக்குப் பின் ராம ஜென்மபூமியை மீட்க முடியுமானால், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தையும் திரும்பப் பெற முடியும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நேற்று (அக்டோபர் 8) லக்னோவில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய சிந்தி மாநாட்டில் பேசிய முதல்வர், அயோத்தி, லக்னோவில் இருந்து வெகு தொலைவில் இல்லை. 500 ஆண்டுகளுக்குப் பின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது… அங்கிருந்து இரண்டரை மணி நேரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது.
6 ஆண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது? இன்று பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், கோவில் இன்று ஒளிர்கிறது. நீங்கள் விந்தியவாசினி மற்றும் பிரயாக்ராஜுக்கு பயணம் செய்தால், நமது பாரம்பரியத்தின் மீது உங்களுக்கும் உணர்வுகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் உணருவீர்கள்.
500 ஆண்டுகளுக்குப் பின் ராம ஜென்மபூமியை திரும்பப் பெற முடியும் என்றால், சிந்துவை திரும்பப் பெற முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. சிந்தி சமூகத்தினர் தங்களது வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
1947 பிரிவினை சோகமானது, அதைத் தவிர்த்திருக்கலாம், நிறுத்தியிருக்கலாம். ஒருவரின் பிடிவாதத்தால், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட பிரிவினையின் சோகத்தை நாடு காண வேண்டியிருந்தது. இந்தியாவின் நிலத்தின் பெரும் பகுதி பாகிஸ்தானாக மாறியது. சிந்து சமூகம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
அகண்ட பாரதத்தின் ஒரு பகுதி என்பதால் அது இந்தியாவுக்கு வெளியே இருந்ததில்லை. துரதிர்ஷ்டவசமான பிரிவினையால் இந்த சமூகம் பாதிக்கப்பட்டது. ஆனால் அது எந்த பிரச்னையையும் உருவாக்கவில்லை மற்றும் பல பின்னடைவுகளுக்கு மத்தியிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
தாய்நாட்டை விட்டு வெளியேறிய சமூகம் மிகவும் வேதனையை அனுபவித்தது. இன்றும் கூட, பயங்கரவாதத்தின் வடிவில் பிரிவினையின் சோகத்தின் சுமைகளை நாம் சுமக்க வேண்டியுள்ளது. தீவிரவாதம், அராஜகம் போன்றவற்றை எந்த நாகரீக சமுதாயமும் அங்கீகரிக்க முடியாது.
மனித குலத்தின் நலப் பாதையில் நாம் முன்னேற வேண்டுமானால், தீய போக்குகள் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.