மதுரை, பேருந்து நிலையம் அருகே உள்ள சிலரின் வீட்டில் இன்று (அக்டோபர் 11) அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை, பேருந்து நிலையம் அருகே உள்ளது காஜிமார் தெரு. அங்கு வசித்து வருபவர் முகமது தாஜுதீன். இவர் இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே இவர் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்தாரா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது தாஜுதீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சோதனை நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காஜிமார் தெரு முழுவதும் என்.ஐ.ஏ., கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே முழுத்தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.