தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திமுக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சீருடையில் வந்தால் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அக்டோபர் 22 மற்றும் அக்டோபர் 29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று (அக்டோபர் 16) விசாரணைக்கு வந்தன. ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, ஜி.கார்த்திகேயன், வழக்கறிஞர் ரபுமனோகர் ஆகியோரும், திமுக அரசு தரப்பில் ஆர்.சண்முகசுந்தரம், அசன் முகமது ஜின்னா ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
போலீசார் தரப்பில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள மனுவில் போதிய விவரங்கள் இல்லை. அக்டோபர் 30 தென்மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. அதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் மசூதிகள், தேவாலயங்கள், தி.க., அலுவலகம் உள்ள பகுதிகளில் ஊர்வலம் செல்வதற்கு மனுதாரர்கள் அனுமதி கோரியுள்ளனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இந்த ஊர்வலத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என உளவுத்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. அதனால் தான் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என வாதத்தை முன்வைத்தனர்.
அப்போது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மனுதாரர்கள் தரப்பில், போலீசார் ஜாதகத்தை மட்டும் தான் கேட்கவில்லை. மற்ற அனைத்து விவரங்களையும் கேட்டுவிட்டு அனுமதி மறுத்துள்ளனர். இதில் யாரும் தலையிட முடியாது. ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் போலீசார் எதையாவது காரணத்தை சொல்லி தடுக்கின்றனர் என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதி, ‘ஊர்வலம், அணிவகுப்பு, பேரணி செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோன்று சட்டம்-, ஒழுங்கை பாதுகாத்து, பராமரிப்பது என்பது மாநில அரசின் கடமை. அதற்காக அனுமதியளிக்க முடியாது எனக்கூற முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் போல பிற அமைப்புகளிடமும் கேட்கப்பட்டுள்ளதா? என்றார்.
பின்னர், மனுதாரர்கள் கோரியுள்ள அக்டோபர் 22 மற்றும் அக்டோபர் 29 ஆகிய நாட்களில் 33 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.,-க்கள் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சீருடை அணிந்தவர்களை மட்டுமே அணிவகுப்பு ஊர்வலத்தில் அனுமதிக்க வேண்டும்.
போலீசாரின் நிபந்தனைகளை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் பின்பற்றி அமைதியான முறையில் செல்ல வேண்டும். போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அக்டோபர் 22-ல் நடக்கும் அணிவகுப்பு ஊர்வலத்தின் வழித்தடத்தை அக்டோபர் 20-ம் தேதிக்குள்ளாகவும், அக்டோபர் 29-க்கான வழித்தடத்தை அக்டோபர் 24-ம் தேதிக்குள்ளாகவும் போலீசாரிடம் வழங்கி அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி வாங்கிதான் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை நடந்த வேண்டிய சூழலை தமிழகத்தில் கழகங்கள் ஏற்படுத்தி விட்டனர். ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை பார்த்து,
திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் பதறுகிறது என்று தெரியவில்லை. மற்ற மதத்தினர் நடத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும் திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ்.க்கு மட்டும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் உற்சாகமாக நடைபோட வருவார்கள் என்பது நீதியால் நிலைநாட்டப்பட்டுள்ளது.