ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குருவான பங்காரு அடிகளாரின் வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குருவான பங்காரு அடிகளார் நேற்றுமாலை (அக்டோபர் 19) காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது.
பங்காரு அடிகளாரை, பக்தர்கள் அம்மா என்று அழைத்து வந்தனர். பங்காரு அடிகளார் பல்வேறு சேவைகள் ஆற்றி வந்தார். அதில் அவரது கல்வி சேவை குறிப்பிடத்தக்கது.
அவரது சேவையை பாராட்டும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளளது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.