உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து 2வது பிரம்மோற்சவமாக நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், பிரம்மோற்சவ நாட்களில் சிறப்பு தரிசனங்கள் மற்றும் விஜபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். இரண்டு பிரம்மோற்சவ விழாக்களிலும் சுமார் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 58 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவ நடைபெற்ற நாட்களில் மட்டும் 47.56 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அன்னப் பிரசாதத்திற்கான நன்கொடை தொகையை தேவஸ்தானம் உயர்த்தியுள்ளது. திருப்பதி திருமலையில் தினமும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னப்பிரசாதம் மூலம் உணவு உண்டு வருகின்றனர். தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் என பல்வேறு இடங்களில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னதானத்திற்காக தினமும் 14 முதல் 16.5 டன் அரிசி, 6.5 முதல் 7.5 டன் வரை காய்கறிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான நன்கொடை இதுவரை ஒரு நாளைக்கு 33 லட்சம் ரூபாயாக இருந்தது.
இந்த நிலையில் விலைவாசி உயர்வு காரணமாக அன்னதான நன்கொடையை தேவஸ்தான நிர்வாகம் உயர்த்தியுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு அன்னதான நன்கொடை 38 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. காலை உணவுக்கு 8 லட்சம் ரூபாய், மதியம் மற்றும் இரவு உணவுக்காக தலா 15 லட்சம் ரூபாய் என மொத்தம் 38 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.