சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் அலுவலகம் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு கூட செய்யப்படாத நிலையில், தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்து என்.ஐ.ஏ., விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது!
ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது கடந்த அக்டோபர் 25 அன்று பெட்ரோல் கொண்டு தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஆளுநரின் துணை செயலர் செங்கோட்டையன் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று (அக்டோபர் 26) வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவரான ஆளுநர் மீது, கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. ராஜ்பவன் வாயில் எண் 1 என்ற பிரதான நுழைவு வாயில் வழியாக, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளுடன் ஊடுருவ முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ராஜ்பவனுக்குள் மர்ம நபர்கள் நுழைய முடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருந்தபோதிலும் போலீசார் தடுக்க முயன்ற போது மர்ம நபர்கள் பிரதான நுழைவு வாயில் அருகே பெட்ரோல் குண்டை வீசினர். அப்போது பலத்த சத்தத்துடன் அது வெடித்து எரிந்தது.
இதையும் போலீசார் சவாலாக ஏற்று மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். அப்போது மீண்டும் ஒரு பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். உயிரையும் பணையம் வைத்து ஒருவரை போலீசார் பிடித்து விட்டனர்.
பல மாதங்களாக ஆளுநரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகிறது. இதில் பெரும்பாலும் திமுக தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாய்மொழி வாயிலாக பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைத்தளம் வாயிலாக ஆளுநர் பற்றி அவதூறாக மிரட்டல் விடும் வகையில் பேசி வருகின்றனர்.
அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு முன் மயிலாடுதுறையில் தர்மபுரம் ஆதீனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆளுநர் சென்றார். அப்போது, அவரின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது; உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் ஆளுநருக்கு உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும், வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. புகார் குறித்து போலீசார் அலட்சியம் செய்து விட்டனர். இது ராஜ்பவன் பாதுகாப்பை குலைக்கும் அளவுக்கு வந்து விட்டது.
ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், ‘இந்திய தண்டனை சட்டம், 124 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தி, தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் உட்பட, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ராஜ்பவன் தாக்குதல் பற்றிய புகாரை ஏற்று காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை.
குற்றவாளி மீது அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விசாரணை தவிர்க்கப்பட்டு உள்ளது. நியாயமான விசாரணை துவங்கும் முன்பே விசாரணை கொல்லப்பட்டு விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.