இந்திய வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய வீராங்கனையுமான வைஷாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியானது பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். இப்போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 164 வீரர்கள் பங்கேற்றனர்.

சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள். இதில் மகளிர் பிரிவில் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி கலந்து கொண்டு விளையாடினார்.

ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனெட்டா ஸ்டெபனோவா மற்றும் 10வது சுற்றில் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியையும் எதிர்கொண்டு வெற்றியடைந்தார்.

இதனால் 8 புள்ளிகளை பெற்று முன்னிலைக்கு வந்த வைஷாலி, கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான 2024 செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வானார். இதையடுத்து, மகளிர் பிரிவில் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று (நவம்பர் 5) நடைபெற்றது. இதில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை இந்திய வீராங்கனை வைஷாலி எதிர்கொண்டார்.

இந்த போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ஆனால் ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் 8.5 புள்ளிகளை வைஷாலி பெற்றியிருந்ததால், சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். தற்போது வைஷாலி 2497.1 லைவ் ரேட்டிங்கைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்திய வீராங்கனை வைஷாலியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ஸ்விஸ் செஸ் ஓபனில் இந்தியா முதலிடத்தை பிடித்தது மகத்தான பெருமை ஆகும். இது செஸ் விளையாட்டில் இந்தியாவின் திறமைக்கு மற்றொரு உதாரணம். வைஷாலியின் வெற்றியால் நமது நாடு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top