உத்தரகண்ட் சுரங்கம் தோண்டும் போது குகைக்குள் சிக்கிய 41 பேர் உயிரோடு இருப்பது கேமரா மூலம் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இன்று (நவம்பர் 21) குழாய் மூலம் சூடான ரவா கிச்சடி திரவ ஆகாரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ற கவலையில் அவர்களது குடும்பத்தார் இருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அரசு மீட்புப்பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்த புதிய செய்தி கிடைத்துள்ளது என மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 12ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்த பகுதிக்கும் இடைபட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது. அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர்.
தொழிலாளர்களை மீட்பதற்காக மத்திய, மாநில பேரிடர் மீட்பு படைகள் களத்தில் இறங்கியது. அதன்படி கடந்த ஒரு வாரமாக, அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க 40 மீட்டருக்கு குழாய் அமைக்கப்பட்டது. மீட்புப் பணிகளை மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர் உள்ளிட்டோர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் அவ்வப்போது தொலைபேசி வாயிலாக கேட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.