கும்பகோணம் அருகே கீழேப்பரட்டை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்று தகரக் கொட்டகையில் சுமார் 6 மாதமாக இயங்கி வருகிறது. மழை பெய்கின்ற சமயத்தில் கொட்டகைக்குள் தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது கீழப்பரட்டை என்ற கிராமம். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுக் கடந்த மே மாதம் விடுமுறையின் போது பள்ளிக் கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பு புதிய கட்டடம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை, பள்ளி திறந்து சுமார் 6 மாதம் காலமாகியும் இன்றுவரை பள்ளிக் கட்டிடம் கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தகரக் கொட்டகை ஒன்று அமைத்து மேலே தார்ப்பாய் போர்த்தி அதில் மாணவர்களை படிக்கச்சொல்லியுள்ளது திராவிட மாடல் கல்வித்துறை. தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீர் உள்ளே புகுந்து மாணவர்கள் படிப்பதற்கு முடியாமல் மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழை தண்ணீரில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பினால் மழை நீரால் காய்ச்சல் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிய ரூ.3000 கோடி பணத்தை திராவிட மாடல் அரசு என்ன செய்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் விடியாத மாடல் அரசின் கல்வித்துறையின் செயல்பாடுகள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.